வெள்ளி, 3 மார்ச், 2017

 குறிப்பு
'பாதைகள்' என்ற என்னுடைய சிறுகதையின்
மையக் கருத்துப் பாடலாக நான் இயற்றியது
.
 இக்கதியடைய அவள்
செய்த குற்றம் என்ன?
விதி செய்த  சதியே அன்றி
இது வேறென்ன?

அவள்  விரும்பாத நேரத்தில்
மணம் பேசி முடித்தார்
மனம்  ஒன்றாத் திருமணத்தால்
தினம் நொந்து போனாள்.



எதில் சென்று முடியும் என
எண்ணிப் பாராது இருந்து விட்டாள்
பின் விளைவுகளைச்  சிறிதும்
சிந்திக்காமல் போய்விட்டாள்
.
 உயிருக்கு உயிரான அன்பை
 உதறித் தள்ளி விட்டாள்
.உயிரினும் மேலான அன்பை
 உயர்வாகப் போற்றத் தவறிவிட்டாள்

ஞாலமெங்கும் தேடினாலும்
கிடைத்திடாத அன்பினை
இளமை வேகத்தில்
அலட்சியப் படுத்திவிட்டாள்.
.
காலம் கடந்து வருந்துகிறாள்
பாலம் உடைந்த பின்பு
ஆற்றினைக் கடந்து அக்கரை
 சென்றடைய எண்ணுகிறாள்
.
நதி வற்றிப் போனபின்பு
ஓடத்தில் போக விரும்புகின்றாள்
கடும் புயலில் கை விளக்கேற்றி
நெடும் பயணம் செல்ல நினைக்கின்றாள்

வசந்த காலம் வந்தபோது
வாளா விருந்து விட்டாள்
இளமைக் காலம்  கழிந்த பின்பு
அன்புக்கு ஏங்குகிறாள்
.